Skip to main content

வைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா?” - வாகை சந்திரசேகர் ஆவேசம்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
toll

 

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை மரியாதை குறைவாக பேசியதோடு, காவல்துறை அதிகாரியை தள்ளிவிடுகிறார் முன்னாள் எம்.பி. அர்ஜுனன். பதிலுக்கு காவல்துறை அதிகாரியும் அர்ஜுனனை தள்ளிவிடுகிறார். பின்னர் கோபமடைந்த அந்த அர்ஜுனன், காவல்துறை அதிகாரியை காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் காவல்துறையினரை மரியாதை குறைவாக பேசி, தாக்கியது 'நடிகர் வாகை சந்திரசேகர்' என பதிவிடப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவுக்குக் கீழே, ''இந்தப் பதிவை போட்டவர் சந்திரசேகரை பார்க்கவில்லை. தி.மு.க.வை குற்றம் சொல்லும் நோக்கம் மட்டுமே இருக்கிறது என்றும் அது சந்திரசேகர் கிடையாது, தற்போது அவரது முகத்தையும், குரலையும் தமிழ் மக்கள் நன்றாக அறிவர், அது தெரிந்தும் இங்கு சிலர் ஒன்னும் தெரியாது போல் தி.மு.க.-வை திட்டி வருகிறார்கள். இது நாட்டுப் பற்று அல்ல. தி.மு.க. மீது உள்ள பகை'' என வாகை சந்திரசேகருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

மேலும், ''போலீஸ் இந்த மாதிரி ஆட்களை ஸ்டேஷனுக்கு ஏன் கொண்டுபோகவில்லை. இதே ஏழை எளிய மக்களாக இருந்தால் வேறு முறையில் இறங்கி இருப்பார்கள். போலீஸ்களுக்கு இது தேவைதான் ஒரு ஏப்பை சப்பை கிடைத்தால் எவ்வளவு ரவுடித்தனம் பண்ணுகிறீர்கள். இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்'' என்றும் ''வீடியோவில் இருப்பது அ.தி.மு.க.-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன்'' என்றும் பதிவுகள் நீண்டு கொண்டே போகிறது. 

 

vagai chandrasekar mla

 

இதுதொடர்பாக நாம் நடிகர் வாகை சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது, “கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு இல்லாமல், குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் அதிலிருந்து மீண்டு வர மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சாத்தான்குளம் சம்பவம் மனதை விட்டு நீங்காமல் உள்ளது. ஜெயராஜ் மனைவியும், பென்னிக்ஸ் தாயாருமான செல்வராணி, ஜெயராஜ் மகளின் அழுகுரல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்களால் மக்கள் வேதனையில் இருக்கும்போது, இதனை ஒரு செய்தியாக ஆக்க நான் விரும்பவில்லை. என்னை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். என்னுடைய தொகுதியான வேளச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். 40 ஆண்டுகாலமாக கலைத் துறையில் இருக்கிறேன். அரசியலில் தி.மு.க.-வில் இணைந்து ஒரே இயக்கத்தில் பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற செய்திகள், போலிப் பதிவுகள் என்னுடைய கலை வாழ்க்கையை, பொதுவாழ்க்கையை நிச்சயம் பாதிக்காது.

தி.மு.க. மீது இருக்கும் நல்ல பெயரை கெடுக்க இதுபோன்ற அவதூறுகளை சிலர் தொடர்ந்து பரப்புகிறார்கள். தி.மு.க. தலைவரும், தி.மு.க.-வினரும் சிறப்பாக பணியாற்றுவது அவர்களுக்கு பொறுக்கவில்லை. அரசியலில் நாகரீகமாக கருத்து தெரிவித்து, அதற்கு எதிர்க்கருத்துத் தெரிவித்து மோத வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி தி.மு.க.-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது எனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்க மாட்டேன். தி.மு.க.-வை இழிவுப்படுத்தும் நோக்கில் செய்துள்ளார்கள். ஆகையால் தி.மு.க. தலைவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாங்கள் இதனை சட்டப்படி சந்திக்க உள்ளோம்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விவசாய பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு; கலைஞர் விழாவில் 200 விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகள்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Farm implements for farmers at kalaignar centenary function

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர்  ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.   

Farm implements for farmers at kalaignar centenary function

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி.  “வாடிய  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள்  அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.  

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.