Skip to main content

நடிகர் சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

 

காமராஜர் பிறந்தநாளில் அவர் பிறந்த  மண்ணில் சரத்குமார் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள “காமராஜர் மணிமண்டபம்” திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 
 

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்தலைவர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் - இடையறாமல் அவர் ஆற்றிய பொதுப் பணிகளுக்கும், நாட்டின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும்  ஆற்றிய தொண்டறத்திற்கும், பொதுமக்களின் உற்ற, நெருக்கமான, நயத்தகு நண்பராக, வழிகாட்டியாக, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தொடர்ந்து செய்த தன்னலமற்ற சேவைகளுக்கும், நன்றி பாராட்டுவதாக அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரிய முயற்சியைத் துவங்கி - வெற்றியடைந்துள்ள சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுதலையும், போற்றுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 

actor sarathkumar mk stalin


 

முதன்முதலாக பெருந்தலைவர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலிருந்த சென்னை மாநகராட்சிக்கு உண்டு. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தி, அந்தமாநாட்டைத்  தொடங்கி வைத்தவர்  பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.   குமரிக் கடற்கரையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தலைவர் கலைஞர் அவர்கள்,  கர்மவீரர் காமராஜருக்கு ஏற்றமிகு மணி மண்டபத்தை எழுப்பியிருக்கிறார். சென்னை கடற்கரை சாலை, மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் ஆகியவற்றுக்கு, பெருந்தலைவரின் பெயர் சூட்டி மகிழ்ந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
 

இதே விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியதும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜர் அவர்களின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்" என்று பெயர் சூட்டியதும்  தலைவர் கலைஞர் அவர்கள் ஆவார்கள். கழக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு"  சிவகாமி அம்மையார் அவர்களின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர். அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காமராஜர் பிறந்த ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுப்போம்" என வாக்குறுதி அளித்து - அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆட்சிப்  பொறுப்பேற்றவுடன் ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அறிவித்து, கழக ஆட்சியில் 24.5.2006 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்தக் கல்வி நாள், எதிர்காலத்தில் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அந்த அரசு ஆணையை, சட்டமாகவே நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திடக்  கடமைப்பட்டுள்ளேன்.


 

“அனைவரும் கல்வி கற்க வேண்டும்" என்ற பெருந்தலைவரின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், முதல் கல்வி வளர்ச்சி நாளான 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு- அந்த விழாவில், 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2007 அன்று  “சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும்",  3வது ஆண்டுக் கல்வி நாளான 15.7.2008 அன்று “முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும்" அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே பள்ளி மாணவர்களுக்கு உண்மையான ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழையும் பெருமையையும் சேர்க்கும் அடுக்கடுக்கான காரியங்களை தலைவர் கலைஞர் அவர்கள் மிகுந்த களிப்புடன் நிறைவேற்றினார்.


 

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மணி மண்டபம் -  பெருந்தலைவர் அவர்களின் பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை
 

ஆகிய நற்பண்புகளையும், தமிழகத்திற்கும், இந்திய முன்னேற்றத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளையும் - அடுக்கடுக்கான சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்கு எந்நாளும் நினைவூட்டும் நேர்த்தியான அடையாளமாக விளங்கிடும் என்று இந்த நல்ல நேரத்தில் உவகை கொள்கிறேன்; வாழ்த்துகிறேன்! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.