T. Velmurugan

கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில் ஈடுபடும் கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர்களும், போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதே போன்று, கர்நாடகாவில் உள்ள தமிழர்களும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அங்கு வந்த கன்னட அமைப்பினர், தமிழர்கள் வைத்திருந்த பதாகைகளும், கருப்புக்கொடியையும் கிழித்து எரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழில் பதாகைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுவதும், தாக்குதல் நடத்துவதும் புதியதல்ல. காலம் காலமாக தொடர்கதையாகவே அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, கர்நாடக மாநிலமே போராட்டக் களமானது. தமிழர்கள் மீது கன்னடனர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உணவகங்கள், உடைமைகள், தமிழ் பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் அரை நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கன்னட அமைப்பினர்களால் தாக்கப்பட்டார். இப்படியான அடுக்கடுக்கான உதாரணங்களை கூற முடியும். கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில் ஈடுபடும் கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், அவ்விவகாரம் இந்திய இறையாண்மையை பாதிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.