“The action of the chieftain is to discipline the union of Sanatana Shakti” – Thirumavalavan

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுநீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை8 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கோவையில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்துள்ளார்கள். விசாரிக்கிறோம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கிறோம் என்றெல்லாம் வாதிடுகிறார்கள். ஆனால், அவர்களின் உண்மையான நோக்கம், அவர்களது குறி செந்தில் பாலாஜி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவருக்கு நெருக்கடியைத்தர வேண்டும். அவரை தடுமாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் அப்போது தான் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று மோடி, அமித்ஷா கும்பல் கணக்கு போடுகிறது.

முதலமைச்சர் கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போதே இந்தியாவில் எந்த மாநில கட்சித் தலைவரும் சொல்லாத ஒன்றை துணிந்து சொன்னார். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என முதலில் சொன்னவர் மு.க.ஸ்டாலின் தான். இது மோடி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியலை மோடி, அமித்ஷா ஆகியோர் செய்து வருகின்றனர். அனைத்தையும்விட முக்கியமாக, சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சூழல் கனிந்து வருகிறது. அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் அகில இந்திய அளவில் ஸ்டாலின் தான்.

பாஜகவை வீழ்த்துவதும், சனாதன சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும்தான் எங்கள் ஒரே இலக்கு. பாஜகவுடன் முரண்பட்ட, பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் உண்டு. ஆனால் கொள்கை அடிப்படையில் பாஜகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு என களத்தில் இருப்பது முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதனால் தான் ஆர்.என்.ரவி அவ்வப்போது நெருக்கடியைத்தருகிறார். அரசியல்வாதியைப் போல் செயல்படுகிறார்.

அவர்கள் திராவிட அரசியலை வேரறுக்க நினைக்கிறார்கள். பாஜக கோவை மாவட்டத்தில் எளிதாக வளர்ந்துவிடலாம் என நினைத்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு வீழ்த்திக் காட்டியவர் செந்தில் பாலாஜி. மேற்கு மாவட்டங்களில் செந்தில் பாலாஜி இருக்கும் வரை அவர்களால் வாலாட்ட முடியாது என்பதை புரிந்துகொண்டுவிட்டார்கள். செந்தில் பாலாஜியை முடக்கினால் தான் மேற்கு மாவட்டங்களில் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறார்கள்.

நிதிஷ்குமார் இன்று துணிந்து சில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கைகோர்க்கும் சூழல் கனிந்துள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு கூட்டணியை தமிழ்நாட்டில் வழிநடத்தி வருகிறார். எனவே நான் மறுபடியும் சொல்கிறேன். இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதல்வருக்கு வைக்கப்பட்டுள்ள செக். நாம் அனைவரும் முதல்வருக்கு உற்ற துணையாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தத்தான் இங்கு கூடியுள்ளோம். முதலமைச்சர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சனாதன சக்திகளின் சங்கை நெரிப்பதாக உள்ளது. இது திமுகவிற்கு உள்ள நெருக்கடி என்பதை கூட்டணிக் கட்சியில் உள்ள நாங்கள் கண்டும் காணாமலும் இருக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.