Skip to main content

மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டம்? -'ஆவின்' நிர்வாகம் மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

aavin milk

 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் சார்பில் 5 வகையான புதிய பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் நேற்று (08.07.2020) அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் நான்கு பால் பொருட்கள் (மோர், லஸ்ஸி 2வகை, 90நாள் கெட்டுப் போகாத பால்) ஏற்கனவே வணிக சந்தையில் உள்ளவையே.

 

ஏற்கனவே பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டி அழகு பார்த்து விட்ட பிறகும் மீண்டும் புத்தாடை அணிவித்து அக்குழந்தை புதிதாக பிறந்திருப்பதாகக் கூறுவது போல் அமைந்திருக்கிறது தமிழக பால்வளத்துறையின் செயல்பாடுகள்.

 

இது போல்தான் ஏற்கனவே வணிகச் சந்தையில் இருந்த ஆவின் சிறிய பாக்கெட்டை (10 ரூபாய்) புதிதாக விற்பனைக்குக் கொண்டு வருவது போல் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு கொடுத்து மூக்குடைபட்டார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

 

அது போலவே தற்போதும் விற்பனையில் உள்ள லஸ்ஸி, மோர், 90நாட்கள் கெட்டுப் போகாத பால் போன்ற பால் பொருட்களுக்கு புத்தாடை அணிவித்து அவை புதிதாகப் பிறந்திருப்பதாகக் கூறி இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும் ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்க முயன்றுள்ளனர். மேற்கண்ட பால் பொருட்கள் வணிகச் சந்தையில் ஏற்கனவே இருப்பதைத் தமிழக முதல்வருக்கு அது குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்களா..? இல்லை திட்டமிட்டு மறைத்து விட்டனரா..? எனத் தெரியவில்லை.

 

மேலும் முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்துள்ள "ஆவின் டீ மேட் பால்" முற்றிலும் மக்களையும், வணிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

 

ஏனெனில் தற்போது விற்பனையில் உள்ள ஆவின் கொழுப்புச் சத்து, செரிவூட்டப்பட்ட பால் (கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 51.00ரூபாய். அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 1லிட்டர் 49.00ரூபாய் மட்டுமே.

 

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பால்" கொழுப்பு சத்து 6.5% திடசத்து 9.0% எனவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 60.00ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 0.5% கொழுப்பு சத்தை மட்டும் அதிகரித்து விட்டு 1லிட்டருக்கு 9.00ரூபாய் முதல் 11.00ரூபாய் வரை அதிக விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

 

அதே சமயம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலினை (1TS×2.66) 32.00 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அப்படியானால் 0.5TSக்கு 1.50வரை அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யலாம்.

 

ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பாலில்" ஏற்கனவே விற்பனையில் உள்ள கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலினை விட 0.5%மட்டும் (0.5TS-1.33) கூடுதலாக்கி விற்பனை விலையில் 1லிட்டருக்கு 11.00ரூபாய் வரை அதிகரித்திருப்பதைப் பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் விற்பனை விலையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனரோ என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது.

 

மேலும் சென்னை மாநகரில் உள்ள சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் டீ மேட் பாலினை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கே பால் முகவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். சில இடங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்குகின்றனர். அப்படியானால் ஆவின் டீ மேட் பாலினை என்ன விலைக்கு ஆவின் நிர்வாகம் வழங்குகிறது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இது மக்களையும், பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டத்துடனே நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

http://onelink.to/nknapp

 

எனவே தமிழக அரசு புதிய வகை ஆவின் பாலிற்கு நியாயமான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விலையில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடர் கனமழை; தயார் நிலையில் ஆவின் நிர்வாகம்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Continuous heavy rain Management of Aavin readiness

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) மாலை 5 மணி அளவில் சேலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம் போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Continuous heavy rain Management of Aavin readiness

ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.