Advertisment

சுமார் ரூபாய் 7.92 கோடி கையாடல்... அமைச்சர்கள் ஆதரவு இருப்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ponnusamy milk

ஆவின் கூட்டுறவுச் சங்க முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisment

இக்கடிதத்தில்,

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் அ.தி.மு.க. பிரமுகர்களும், அச்சங்கத்தின் நிர்வாகிகளுமான தலைவர் பாண்டி, உபதலைவர் பரமானந்தம் உள்ளிட்டோர் சுமார் 7,92,41,616.00 ரூபாய் (சுமார் எட்டு கோடி ரூபாய்) என்றளவுக்கு கையாடல் செய்தது தணிக்கையில் தெரிய வந்ததும் மோசடி செய்யப்பட்ட தொகையை உரியவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என தணிக்கைதுறை அதிகாரிகள் உத்தரவிட்டு மூன்றாண்டுகளாகியும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் தவறிழைத்தவர்கள் அப்பொறுப்புகளில் இன்றளவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

தமிழக அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் லஞ்ச, ஊழல் முறைகேடுகள் இல்லாமல் சிறப்புற செயல்பட வேண்டும், ஆவினின் முதுகெலும்பாக திகழும் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பு வீணாகக் கூடாது, அது மோசடி பேர்வழிகளிடம் சிக்கி தமிழக அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வரும்தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்சார்பில் மேற்கண்ட முறைகேட்டில் ஈடுபட்டு மோசடி செய்தவர்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர்களுக்கு வட்டியோடு திருப்பி வழங்க வேண்டும் எனக் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்திருந்தோம்.

இந்நிலையில் ஆவின் கூட்டுறவுச் சங்கத்தில் சுமார் எட்டு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மீது மட்டுமே தற்போது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது ஆதரவாளர்களாக இருப்பதால் அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் ஆகியோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

அம்பை எய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் அம்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவராக இருக்கும் பரமானந்தம் அதிமுக தொழிற்சங்கத்தின் மாநில இணைச் செயலாளராக இருப்பதால் அவரையும், பாண்டியையும் காப்பாற்றிட ஆட்சியாளர்கள் துணை போகின்றனரோ..? என்கிற சந்தேகமும் எழுகிறது.

அதுமட்டுமின்றி தற்போது உபதலைவராக இருக்கும் பரமானந்தத்தின் அண்ணன் பழனிசாமி அவர்கள் சிக்கன நாணயக் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே தலைவராக இருந்தவர். அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த காலகட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற காரணமாக இருந்த அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் ஆகியோரை அப்பொறுப்புகளில் இருந்து நீக்குவதோடு, அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், மோசடி செய்த பணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்கவும், அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பழனிசாமி தலைவராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ஆவின் நிர்வாகத்தில் அவர்களுக்கு துணை போன உயரதிகாரிகள் யார்..? யார்...? என்பதையும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தி தவறிழைத்த குற்றவாளிகள் மீதும் மற்றும் தவறிழைத்தவர்களுக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திடவும், ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

http://onelink.to/nknapp

மேலும் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு ஓய்வுபெற்ற ஊழியர்கள் உழைப்பின் சேமிப்பையும், ஆவின் நிறுவனத்தின் நலன் சார்ந்தும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது சங்கம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கநிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

admk ministers cash fraud Cooperative Society madurai milk aavin Ponnusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe