ஆம் ஆத்மி கட்சி தலைமையில் நடைபெற்ற பேரணியில் உணவு, ஊதியம் தருவதாக அழைத்துவந்த பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாபெரும் நடைபெற்றது. இந்தப் பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டு பேசினார். ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் ஆட்சியில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆட்சியில் தான் வங்கு மோசடிகள் அதிகம் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள் 'எங்களை ஆத் ஆத்மி நிர்வாகிகள் ஆள் கணக்கிற்காக அழைத்துச்சென்றனர். அரவிந்த் கேஜ்ரிவாலின் பேரணியில் கலந்துகொண்டால் உணவும், ரூ.350 ஊதியமும் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால், அதைத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள்’ எனக்கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.