Aadhav Arjuna says Let soon build a campaign to attain power

வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

கூட்டணி கட்சிகளான திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக் ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து தொல்.திருமாவளவன் உத்தரவிட்டார். இது தொடர்பாக, வி.சி.க நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமை நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யவுள்ளதாக’ தெரிவித்தார்.

Advertisment

இதையடுத்து, ஆதவ் அர்ஜுனா நீண்ட பதிவு ஒன்றை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர், ‘நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன்’ என்று பதிவிட்டார்.

Advertisment

இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆதவ் அர்ஜூனா தேர்தல் வியூகங்கள் குழுவில் சேர்ந்தது முதல் தி.மு.க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுத்தது தொடர்பாகதகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தியது தொடர்பாக தகவல்களும்இடம்பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோருடன் ஆதவ் அர்ஜூனா எடுத்த புகைப்படங்கள் அடங்கிய காட்சிகளும்அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்த ஆதவ் அர்ஜூனா, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.