Aadhav Arjuna and Nirmal Kumar joined the TVK party

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் பரந்தூர் மக்களை விஜய் அண்மையில் சந்தித்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி த.வெ.க. கட்சியை விஜய் அறிவித்திருந்தார். த.வெ.க. கட்சி தொடங்கப்பட்டு இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்குக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

இதற்கிடையே, அண்மையில் விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுன தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. சென்னை பட்டினம்பக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டதாகவும், இந்த சந்திப்பின்போது த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜுனா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு இணைச் செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார் த.வெ.க.வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் த.வெ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வந்தனர். இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தனர். இதனையடுத்து இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.