Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை தடுத்துக்கொண்டிருக்கிறார் ஆளுநர்! வேல்முருகன் கண்டனம்

T. Velmurugan

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை சட்டத்துக்குப் புறம்பாக தடுத்துக்கொண்டிருக்கிறார் ஆளுநர். இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சட்டத்தை மதிக்காத ஆளுநர் அந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதால், தமிழ்நாட்டை விட்டு அவர் போக வேண்டும்; அல்லது ஒன்றிய அரசே அவரைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இதற்காக, வரும் டிசம்பர் 3ந் தேதி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கும் என அறிவிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சட்டப் பிரிவு 161ன்கீழ் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என கடந்த செப்டம்பர் 6ந் தேதி தீர்ப்பளித்தது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. இதன் மூலம் இவர்களின் விடுதலையை உள்நோக்கத்துடன் தடுத்துவந்த ஒன்றிய அரசுகளின் வழக்கையும் முடித்துவைத்தது.

தீர்ப்பு வந்ததும் உடனடியாகவே தமிழ்நாடு அமைச்சரவை கூடி, சட்டப் பிரிவு 161ன்கீழ் 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆளுநர் அத்தீர்மானத்தில் கையெழுத்திடாதது மட்டுமல்ல; அதனைத் திசைதிருப்பும் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

Advertisment

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார்; அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று பதிலளித்தார். ஆனால் அதன் பிறகு 7 பேரை விடுவிக்கும் தீர்மானம் அவர் ஞாபகத்திற்கே வரவில்லை.

இதனால் அவர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தினோம்; அண்மையில் இதற்காக சிவகங்கையில் இருந்து எனது தலைமையில் மாபெரும் சைக்கிள் பேரணியும் நடத்தினோம். ஆனாலும் அசைந்துகொடுக்கவில்லை ஆளுநர்.

சட்டப்பிரிவு 161ன்கீழ் மாநில அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டாக வேண்டும் என்பது சட்டம். ஆனால் 3 மாதங்களாகியும் அவர் கையெழுத்திடாதிருக்கிறார்; அதாவது சட்டப்படி நடந்துகொள்ளாதிருக்கிறார்.

இப்படி தாமதம் செய்வதால் மீண்டுமொரு தீர்மானத்தை தமிழக அமைச்சரவை அனுப்ப வேண்டும்; அப்போது ஆளுநர் அதில் கையெழுத்திட்டாக வேண்டும் என்பது சட்டமாகும். கையெழுத்திடாதிருந்தால் சட்டப்படி அது தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

எனவே உள்நோக்கத்துடன், சட்டப்படி நடக்காமல் இருக்கும் ஆளுநரைப் படியவைக்க தமிழக அமைச்சரவை தனது இரண்டாவது தீர்மானத்தையும் உடனடியாக அவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அண்மையில், 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்திடக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில், இதன் பிறகும் அவர் கையெழுத்திடவில்லையெனில் வரும் டிசம்பர் 3ந் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் ஆளுநர் கையெழுத்திடவில்லை. இது அவர் கையெழுத்திட மாட்டார் என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில் டிசம்பர் 3ந் தேதி மதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உறுதியாகியுள்ளது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இனைந்துகொள்ளும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.

இதன்மூலம், 7 பேரின் விடுதலையை சட்டத்துக்குப் புறம்பாக தடுத்துக்கொண்டிருக்கும் ஆளுநரை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டத்தை மதிக்காத அவர் அந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதால், தமிழ்நாட்டை விட்டுப் போக வேண்டும்; அல்லது ஒன்றிய அரசே அவரைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இதற்காக, டிசம்பர் 3ந் தேதி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கும் என அறிவிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

perarivaalan Condemned governor 7 people release Issue tvk T. Velmurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe