Skip to main content

“அச்சமடைந்து 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது” - ராகுல் காந்தி

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

“The 33% quota bill was introduced out of fear” – Rahul Gandhi

 

ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலத்திற்கு இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணி செய்துவருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். 

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் இட ஒதுக்கீடு பற்றி அவர்கள் முதலில் பேச திட்டமிடவில்லை. இந்தியா; பாரத் குறித்து விவாதிக்கவே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. ஆனால், மக்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சிறப்புக் கூட்டத்தொடரை அறிவித்து விட்டதால் அவர்கள் அச்சமடைந்து விட்டனர். அதன் காரணமாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தார்கள். நாம் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம். 

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. ஆனால், 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை தற்போதே நடைமுறைப்படுத்தலாம். பா.ஜ.க. இதற்கு 10 வருடங்கள் காலதாமதம் செய்கிறது. நமக்கு ஒ.பி.சி. பெண்களும் இதில் பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கிய விவகாரம்; ராகுல்காந்திக்கு ஸ்வாதி மாலிவால் பரபரப்பு கடிதம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 Swati Maliwal wrote letter to Rahul Gandhi for Kejriwal's aide case

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து, டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறும் ஸ்வாதி மாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின் சதி திட்டத்தின் அடிப்படையில்தான் அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களான ராகுல்காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களுக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘கடந்த 18 வருடங்களாக களத்தில் பணியாற்றி, 9 ஆண்டுகளில் 1.7 லட்சம் வழக்குகளை மகளிர் ஆணையத்தில் விசாரித்துள்ளேன். யாருக்கும் பயப்படாமல், யாருக்கும் தலைவணங்காமல், மகளிர் ஆணையத்தை மிக உயரிய நிலையில் நிறுத்தியிருக்கிறேன். ஆனால், முதல்வர் வீட்டில் என்னை மோசமாகத் தாக்கியதும், பிறகு என் குணத்தை இழிவுபடுத்தியதும் மிகவும் வருத்தமாக உள்ளது.

முதல்வரின் உதவியாளர் தாக்கிய விவகாரத்தில் என்னுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. மேலும், அவர்கள் திட்டமிட்டு, என்னுடைய நடத்தை குறித்து விமர்சனம் செய்தனர். எனது குணாதிசயங்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களை நான் எதிர்கொண்டேன். கடந்த ஒரு மாதமாக, நீதிக்காகப் போராடும் போது எதிர்கொள்ளும் முதல் வலியை நான் சந்திக்கிறேன். இன்று இந்த விவகாரம் தொடர்பாக இந்தியக் கூட்டணியில் உள்ள அனைத்து பெரிய தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நான் எல்லோருடனும் சந்திக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

Next Story

“விடாமுயற்சி கொண்டவர் ராகுல் காந்தி” - செல்லூர் ராஜூ மீண்டும் புகழாரம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Sellur Raju praises again Rahul Gandhi

விடாமுயற்சி கொண்டவர் ராகுல்காந்தி என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு இன்று (19-06-24) பிறந்தநாள். அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழாரம் சூட்டியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (19-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர், “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ராகுல்காந்தி தனது விடா முயற்சியால் காங்கிரஸை கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார். 

கடந்த மாதம், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வீடியோவை வெளியிட்டு ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவரை செல்லூர் ராஜூ புகழ்ந்து பேசியதற்கு அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தியைப் புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.