2024 parliamentary elections; The secret told by B. Chidambaram!

நாடாளுமன்றத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் பாஜகவை அகற்றி காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கத்துடிக்கிறது.

Advertisment

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சித்து வருகிறது. ஆனாலும் திரிணாமூல், ஆம் ஆத்மி, சந்திரசேகர்ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைய தற்போது வரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனிடையே அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடகத் தேர்தல் முடிந்த உடன் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், ஜூன் 12 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் கூட்டம் பீகாரில் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தல் யுக்தி குறித்தெல்லாம் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் பாஜக அல்லாதஅனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். என் கருத்துப்படி, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், 400 முதல் 450 இடங்களில் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதுதான் ஆசை அதுவே லட்சியம் . ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க இருக்கிறது. மேற்கூறியதை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது நடக்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும்” எனக் கூறியுள்ளார்.