2 Naam Tamilar Party members arrested; A case has also been filed against Seaman

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இந்த விவகாரத்தில் தற்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையை துவங்கினார். இந்நிலையில், வீரப்பன்சத்திரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திமுகவினருக்கும் நாம் தமிழருக்கும் இடையே தகராறு ஏற்அபட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தாக்குதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது, “ஒழுங்காக வாக்கு கேட்டுக்கொண்டு அமைதியாக வந்து கொண்டிருந்தோம். ஏன் தாக்கினார்கள் எனத் தெரியவில்லை. மாடியில் கற்களைக் குவித்து வைத்துக்கொண்டு எறிகிறார்கள். இதனால் எங்கள் கட்சியினர் ஆறேழு பேரின் மண்டை உடைந்துவிட்டது. காரையும் அடித்து நொறுக்கிவிட்டார்கள். தாக்கியது திமுகவும் காங்கிரசும் தான். எங்களை என்ன பாகிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்தா தாக்குவர்கள். திமுகவும் காங்கிரசும் தான் தாக்கியுள்ளார்கள்.

நீங்கள் முன்தயாரிப்பாக கற்களையும் கட்டைகளையும் கொண்டுவந்து விட்டீர்கள். அதேபோல் நானும் கட்டைகளையும் கம்புகளையும் கொண்டுவந்து திருப்பி அடித்தால் என்ன ஆகும். இப்படித்தான் ஆட்சியை நடத்துவீர்களா? பின் எதற்கு தேர்தலை வைக்க வேண்டும். கல்லைக் கொண்டு அடித்து எங்களை அச்சுறுத்தினால் நாங்கள் போய்விடுவோமா. எங்களைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா” எனக் கூறினார்.

தாக்குதல் நடந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இன்று ஈரோடு சத்திரம் பகுதியில் நடந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஜய் மற்றும் கணேஷ்பாபு என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியின சமுதாயத்தை குறித்து சீமான் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அருந்ததியின சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்துசீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.