Skip to main content

வெள்ளிக்கிழமை தோறும் 2 மணி நேரம் வேலை குறைப்பு; புதுச்சேரி அரசு அறிவிப்பு  

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

2 hours work reduction every Friday; Puducherry Government Notification

 

புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன்படி அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் காலை 11 மணிக்கு வேலைக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை, “முதலமைச்சர் ரங்கசாமியிடம் நான் ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 2 மணி நேரம் வேலையில் சலுகை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். புதுவையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு செல்வ சலுகையும் உள்ளது. நேர சலுகையும் உள்ளது. ரூ.1000 பணமும் கொடுக்கப்படுகிறது. நேரச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் பெண்கள் ஆக்கப்பூர்வத்துடனும் ஊக்கமுடனும் பணியாற்றுவார்கள். பெண்களுக்கான இரண்டு மணி நேர வேலை நேரம் குறைப்பு என்பது அரசுத் துறைக்கு சொல்லியுள்ளோம். அரசுத் துறையைப் பார்த்து தனியார் துறையும் பின்பற்றுவார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.

 

அதே வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரெங்கசாமி, “பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதுமானது. வெள்ளிக்கிழமை வீடுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் இருக்கும்” எனத் தெரிவித்தார். பின்னணியில் தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் லேட்டாக வராமல் லேட்டஸ்ட்டாக வரலாம்” எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

“தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்” - ஆளுநர் தமிழிசை பெருமிதம்

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Governor Tamilisai is proud of the opening of Parliament with "heartfelt thanks".

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதை வரவேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்’ எனக் குறிப்பிட்டு ஆரம்பித்துள்ளார். அதில், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடைசூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.

 

நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும்,தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்திருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டது. அன்று பாடியது பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.

 

யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்றுப் புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பாரதப் பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.