/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/03_64.jpg)
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத்தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயலாகும்; நாடாளுமன்றம் என்பது ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல; அது இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களால் கட்டப்பட்டது” எனத்தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “அரசியல் சாசன சட்ட விதி 79 ஐ மதிக்க வேண்டாமா? புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? கட்டடப் பணியை துவக்கும் பொழுதும், முடிக்கும் பொழுதும் சிங்கத்தின் கோரப் பற்களில் ஜனநாயக மாண்புகளின் குருதி படிவதா? எல்லாம் நானே என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு?பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு, நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் புறக்கணிப்பு.நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை பிரதமரே;ஜனநாயகத்தின் சின்னம். 19 எதிர்க்கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல்...” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)