t palur jayankondam  - panchayat president

Advertisment

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரலாற்றுப் புகழ்வாய்ந்த கோவிந்தபுத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே விவசாயம்தான். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு கிராம பெண்கள் பலரிடமும் மனு கொடுத்து பயனில்லாமல் வெறுத்துப்போன கிராம மக்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவிந்தபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்டு கிராம பெண்கள் இந்திரா கதிரேசனை வெற்றி பெறச் செய்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்து வருகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம பெண்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்து தங்களது கிராமத்து மக்களின் பெண்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் மதுபானம் விற்பவர்களிடம் கண்ணியமாக சொல்லி உள்ளார் இந்திரா கதிரேசன்.

ஒரு சிலர் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு இனி மதுபானம் விற்பதில்லை என உறுதி அளித்து உள்ளனர். மீதமுள்ளவர்கள் சற்று அடம் பிடிக்கவே ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸை தொடர்பு கொண்டு, மதுபானம் எங்கள் கிராமத்தில் விற்பதால் கிராம பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கிராமம் மதுவில்லா கிராமமாக மாற வேண்டும் அதற்குத் காவல்துறை ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லையெனில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கோவிந்தபுத்தூர் கிராம பெண்கள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என துணிச்சலாக கோவிந்தபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கூறியவுடன், அதிரடியாக ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்களை கோவிந்தபுத்தூர் கிராமத்திற்கு அனுப்பி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை எச்சரித்து இனி மதுபானம் விற்பனை செய்யமாட்டோம் என உறுதி மொழி கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டு, இனி மீறி விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக மதுபானத்திற்கு எதிராக குரல் கொடுத்த துணிச்சல் பெண்மணி இந்திரா கதிரேசன் கூறினார்.

Advertisment

இவருடைய துணிச்சலான செயலை அறிந்த பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த கோவிந்தபுத்தூர் தலைவி இந்திரா என்ற பெயருக்கேற்ப இரும்பு மங்கையாக உள்ளார் என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.