Advertisment

அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் செங்கோட்டையன்... ராமதாஸ் நம்பிக்கை!

ramadoss

கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தற்போது நடத்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன், பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகளே கூறிவருகின்றனர். தேர்வு எழுதிதான் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என்பதில் தங்களக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மின்னல் வேகத்தில் கரோனா பரவும் நேரத்தில் எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தேர்வு எழுத நல்ல மனநிலை வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் பெற்றோர்கள். எதிர்க்கட்சியினர் பலரும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ''10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் பொதுத்தேர்வுகளை இப்போது நடத்துவதற்கு எதிராக இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் அரசு பிடிவாதம் காட்டுவது யாருக்கும் நன்மை பயக்காது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்தி தான் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் சூழலில் இத்தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்பது தான் இப்போதைய வினா. சென்னையில் நேற்று வரை 22,149 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 31,667 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவை அனைத்தும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப் பட்ட புள்ளி விவரங்கள் மட்டுமே. சோதிக்கப்படாமல் நோய்த்தொற்றுடன் நடமாடுவோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சென்னையில் ஒரு லட்சத்து 21,950 பேருக்கு கொரோனா ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; அவர்களில் 22,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் ஐந்தரை பேருக்கு ஆய்வு நடத்தினால் அவர்களில் சராசரியாக ஒருவருக்கு கரோனா உறுதியாகிறது. ஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சென்னையில் ஒரு லட்சத்துக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை பேரில் ஒருவருக்கு கரோனா உறுதி என்பதை அளவீடாகக் கொண்டால் சென்னையில் ஒட்டுமொத்தமாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை மக்களே யூகித்துக் கொள்ளலாம். ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவர்களுக்கு கரோனா தொற்று இருக்க முடியாது அரசாலோ, அமைச்சர்களாலோ, அதிகாரிகளாலோ உறுதியளிக்க முடியாது.

சென்னையில் நூறு மீட்டர் தொலைவைக் கடந்து செல்வதற்குள் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களில் எவருக்கேனும் ஒருவருக்குத் தொற்று இருக்கலாம். காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என மக்களை அதிக எண்ணிக்கையில் சந்திக்கும் அனைவருமே அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு, 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு என்ற பெயரில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஐந்து நாட்களுக்கு தேர்வு மையங்களில் ஒன்று திரட்டுவது மிகவும் ஆபத்தானதாகும். அவர்களுடன் 11-ஆம் வகுப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு தேர்வுக்காக 8.32 லட்சம் மாணவர்களையும், 12-ஆம் வகுப்பில் எழுதத் தவறிய கடைசி தேர்வை எழுதுவதற்காக சுமார் 35 மாணவர்களையும் குவிய வைப்பது நோயை விலை கொடுத்து வாங்கும் செயலாகவே அமையும். ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’’ என்ற வள்ளுவரின் குறளை எழுத வைத்து அதற்கு மதிப்பெண் வழங்கும் தேர்வுத்துறை, அந்த திருக்குறளுக்கான பொருளைப் புரிந்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிர்களுடன் விளையாடக் கூடாது.

அரசுத் தேர்வுத்துறையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பொறுப்பாளரான ஓர் இணை இயக்குனர், ஓர் உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ஓர் உதவியாளர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் என்றெல்லாம் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் கரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது? அது எவ்வளவு வேகமாகப் பரவும் என்பது குறித்தெல்லாம் மற்றவர்களை விட தேர்வுத்துறையினருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருந்தும் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டக்கூடாது.

கரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான். ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டும் தான் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் கூட ஒரு மையத்தில் குறைந்தது 100 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே மாணவர்களிடையே கரோனா பரவுவதற்குப் போதுமானது.

மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத, படித்திருப்பது மட்டும் போதாது. மகிழ்ச்சியான மனநிலையும் தேவை. எந்த நேரத்தில் யாரிடத்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் இருக்கும் மாணவர்களால் எவ்வாறு தேர்வை நன்றாக எழுத முடியும். இவை அனைத்துக்கும் மேலாக, இவ்வளவு ஆபத்தான சூழலில் அவசரமாகப் பொதுத்தேர்வை நடத்தி நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்? மாணவச் செல்வங்களின் உயிர்களைப் பணயம் வைத்து தேர்வு தேவையா? எனச் சிந்திக்க வேண்டும்?

http://onelink.to/nknapp

கல்வித்துறை உயரதிகாரிகளில் பலருக்கும் இத்தேர்வுகளை அவசரமாக, ஆபத்தான சூழலில் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. பத்தாம் வகுப்புக்காவது தேர்வுகளை நடத்தியாக வேண்டும்; 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் எதற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை- பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அதனால் பாதிப்பின்றி அடுத்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பில் பயிலலாம். அவ்வாறு இருக்கும் போது அந்த வகுப்புக்கு விடுபட்ட ஒரு பாடத்திற்கான தேர்வை நடத்தத் துடிப்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்.

எனவே, கரோனா அச்சம் முழுமையாக விலகும் வரை 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருப்பார் என்று நம்புகிறேன். ஆகவே, மேற்கண்ட கோரிக்கைகளைக் கொள்கை முடிவுகளாக எடுத்து அறிவிப்பார்; அதன்மூலம் மாணவர்கள், பெற்றோர், மக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் என நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

senkottaiyan Ramadoss 10th exam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe