Skip to main content

"பொதுத்தேர்வைக் கைவிடுங்கள்!  மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்!’’ -எடப்பாடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

mks


கரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அதற்கேற்ப, பொதுத்தேர்வுகள் நடந்தே தீரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். நெருக்கடியான காலக்கட்டத்தில் பொதுத் தேர்வுகள் நடத்துவது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தபடி இருக்கின்றன. 
 


இந்த நிலையில், இது குறித்து இன்று அறிக்கை வாசித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’உலக அளவில் கரோனா நோய்த் தொற்று பரவி வருவதில் இந்தியா 6-ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற அபாயகரமான நிலைக்கு நடுவே, தமிழ்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு என நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர; ஒரே நிலையிலோ, குறையும் அறிகுறியோ இப்போது இல்லை. போதிய அளவில் பரிசோதனைகள் பரவலாகச் செய்யப்படாத சூழலிலேயே இந்த எண்ணிக்கை என்றால், உரிய முறையில் சோதனைகள் நடத்தப்பட்டால், நோய்த்தொற்று எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சப்பட வைக்கும் நகரமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவருக்கு யாரிடமிருந்து தொற்று பரவியது என்கிற தொடக்க நிலைத் தொற்று  தெரியாத அளவில் சென்னையில் நாள்தோறும் பரவி வரும் நோய்த் தொற்று என்பது, சமூகத் தொற்று எனப்படும் கட்டத்தை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கையும் இருநூற்று ஐம்பதுக்கு மேல் சென்றுவிட்டது. கோவிட்-19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட 'க்ளேட் A13I' ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது. நோய்த் தொற்றைத் தடுப்பதிலும் - போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ- மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டமாகும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்பது, மாணவ - மாணவியருக்கு மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர், உடன்பிறந்தோர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
 

 


எதிர்க்கட்சியினர் ஆலோசனை சொன்னால், இவர்கள் என்ன டாக்டர்களா? என்று ஏகடியம் பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக 5 மந்திரிகள் கொண்ட குழுவை நியமித்திருக்கிறதே அவர்கள் என்ன எம்.பி.பி.எஸ். எனும் மருத்துவப் படிப்புப் படித்தவர்களா? அல்லது விஞ்ஞானிகளா? லண்டன் - அமெரிக்கா சென்று உயர் மருத்துவப் பட்டம் வாங்கியவர்களா? என மக்கள் கேட்கிறார்கள்.

’சொந்தப்  புத்தியும் இல்லை; சொல் புத்தியும் இல்லை’ என்பதுபோல நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பில் முற்றிலுமாக ‘ஃபெயில்’ ஆகியுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 'பாஸா - ஃபெயிலா' என்பதையறிவதற்காக பொதுத் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டுவது, அதன் அக்கறையற்ற செயல்பாட்டையே எடுத்துக் காட்டுகிறது.

ஹால் டிக்கெட் வாங்குவதற்குப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பிலிருந்து பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் என அரசு சொல்கின்ற அனைத்துமே நோய்த் தொற்றுப் பரவலுக்கு வலிந்து இடமளிக்கின்ற செயல்பாடுகளேயாகும். கிராமப்புற ஏழை மாணவர்கள் - அரசுப் பள்ளியில் பயில்வோர் எனப் பலரும் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தி பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது பாகுபாட்டை வளர்க்கின்ற, பச்சை ஏமாற்றுத்தனமாகும்.
 

http://onelink.to/nknapp


‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை! நமக்கோ உயிரின் வாதை!’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதை வரிகள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான். மக்கள் நலன் பற்றியும் சிந்திக்காமல், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் ‘நோய் வளர்ப்புத் திட்டத்தைச்' செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையான, பாதுகாப்பான நிலை உருவான பிறகு தேர்வை நடத்திக் கொள்ளலாம். ஆட்சியாளர்கள் தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்’’  எனத் தனது அறிக்கையில் எச்சரித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 

 

சார்ந்த செய்திகள்