தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தனது கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை நேற்று விஜய் கண்டித்திருந்தார்.

Advertisment

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர்.என்.ஆனந்த்  மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

Advertisment

மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. நமது மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடம் 'விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம்  மேற்கொள்வது' பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''விஜய்யை பொறுத்தவரை அவர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அது அவருக்கு ஒரு பக்கபலமாக இருக்கும். ஆனால் தேர்தல் களத்தில் தமிழ்நாட்டுடைய உச்சி இடத்தை அடைய வேண்டுமென்றால் அவர் செயலாற்ற வேண்டும்.

Advertisment

ஒரு நாள், இரு நாள் கிடையாது நீங்கள் வருடம் முழுவதும் பல வருடங்கள் பணியாற்ற வேண்டும். அரசியல் என்பது 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் கிடையாது. இது ஒரு மாரத்தான். இதில் சலிப்பு தன்மை இல்லாமல் தொடர்ந்து போராடுவது தான் அரசியல். எனவே விஜய்யை பொறுத்தவரை அவருடைய செயல்பாடுகளை வைத்து தான் நாம் சொல்ல முடியும். மக்களும் அதைவைத்து தான் எடை போடப் போகிறார்கள். அவர் ஒரு திரை நட்சத்திரம் என்பதால் பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து மட்டும் உச்சி இடத்தை அடைவாரா என்பது முடியாதது. 

திமுக தன்னை கண்டு பயப்படுவதாக விஜய் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். ஜனநாயகப் பூர்வமாக விஜய் மக்கள் மத்தியில் தன்னுடைய கருத்துக்களை சொல்லலாம். விஜய்யின் பின்னாடி ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அது கூடுவதால் பொது இடத்திற்கு, மக்களுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக சில இடங்களில் தவிர்க்கச் சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.