தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில், கே.டி.ஆர். பவுண்டேஷன் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், “வளரும் தமிழகம் வெல்லும் பாரதம்” என்ற தலைப்பில் மாபெரும் வண்ணக் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், பெண்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கோலப்போட்டியில், சிவகாசி மாநகராட்சி பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும், 27,599 பேர் ஒரே நேரத்தில் தங்களது வீடுகளின் முன்பாக கோலம் இட்டனர். இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவங்களுடன் வரையப்பட்ட வண்ணக் கோலங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
உலக அளவில் இதுவரை நடைபெற்ற கோலப்போட்டிகளில், அதிக எண்ணிக்கையிலானோர் ஒரே நேரத்தில் பங்கேற்ற முதல் நிகழ்வாக இது அமைந்தது. இதனை ஆய்வு செய்து உறுதி செய்ய, அமெரிக்காவைச் சேர்ந்த Golden Book of World Records நிறுவனத்தின் ஆசிய கண்டத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் மணீஷ் விஷ்ணோய் (MBA., PhD.) சிவகாசிக்கு நேரில் வருகை தந்து, தனது குழுவினருடன் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். அனைத்துச் சரிபார்ப்புகளும் நிறைவடைந்த பின்னர், இந்த கோலப்போட்டி உலக சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/16/671-2026-01-16-21-56-07.jpg)
இதையடுத்து நடைபெற்ற விழாவில், உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை டாக்டர் மணீஷ் விஷ்ணோய், கே.டி.ஆர். பவுண்டேஷன் காப்பாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கினார்.
விழாவில் பேசிய ராஜேந்திரபாலாஜி, “அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கோலப்போட்டி நடத்தப்பட்டது. இது ஒரு சாதாரண கோலப்போட்டி அல்ல; வெற்றியின் சின்னமாகவும், தமிழ்ப் பெண்களின் கலாச்சார விழாவாகவும் மாறியுள்ளது. வீர விளையாட்டாகத் தொடங்கிய இந்த முயற்சி, இன்று உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பெண்கள் வரைந்துள்ள ஓவியம் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளதைப் பார்க்கும்போது பெண்கள் மனதில் இடம் பெறுங்கள்; வெற்றி பெறுவீர்கள். அது அதிமுக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியபடி, தற்போது அதிமுகவின் செயல்பாடுகள் பெண்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. கலைநயம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை இந்தப் போட்டியை தனித்துவமானதாக ஆக்கியிருக்கிறது. தைப்பொங்கல் தமிழரின் வாழ்வோடு இணைந்த மகிழ்ச்சித் திருநாள். இந்த மண்ணில் பிரிவினைக்கு இடமில்லை.
சாதி, மதம், வேறுபாடுகளைத் தாண்டி, “தமிழர்” என்ற ஒரே அடையாளத்தில் சிவகாசி மக்கள் ஒன்று திரண்டு இந்த உலக சாதனையை உருவாக்கியுள்ளனர். இது தமிழர் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் பெருமைமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது. சிவகாசியின் பெயரை சர்வதேச அளவில் உயர்த்திய இந்த ‘எழுச்சிப் பொங்கல்’ கோலப்போட்டி, வரலாற்றில் நினைவுகூரப்படும் சாதனையாக நிலைத்து நிற்கும்” என்றார் பெருமிதத்துடன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/16/672-2026-01-16-21-54-50.jpg)