Advertisment

வேல் யாத்திரைக்கு ஆட்களைத் திரட்டும் அதிமுக! -திருமாவளவன்

ddd

தினந்தோறும் தடையை மீறும் பாஜகவினரை கைதுசெய்து ரிமாண்டு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக நடத்தும் நாடகத்துக்கு அதிமுகவும் துணையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பு உண்மைதான் என்றால் தடையைமீறி யாத்திரை செல்பவர்களைக் கைது செய்து ரிமாண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Advertisment

பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்தது. கரோனா பெருந்தொற்று காரணமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பார்த்த பலரும் அதிமுக அரசு துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பாராட்டினார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் யாத்திரை என்ற பெயரில் பாஜகவினர் நாடகம் நடத்துவதையும் ஆங்காங்கே கூடுபவர்கள் சிலரைக் கைதுசெய்து மாலையில் விடுவிப்பதையும் பார்க்கும்போது இது பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து ஆடும் நாடகமா என்ற சந்தேகமே எழுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். அவர்களைக் கைது செய்து மாலையில் விடுவிப்பதால் அவர்கள் மீண்டும் இன்னொரு ஊரில் அடுத்த நாள் போய் அதே நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். காவல்துறையின் தடையை அதே நபர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு ஊர்களில் மீறும்போது அவர்களை ரிமாண்டு செய்யாமல் விடுவிப்பது ஏன்? ஒப்புக்கு கைதுசெய்து மாலையிலேயே விடுவிப்பது எந்தவிதமான அணுகுமுறை? இதே அணுகுமுறையை மற்ற கட்சிகளுக்கும் தமிழகக் காவல்துறை பின்பற்றுமா? நாங்கள் அடிப்பதுபோல அடிக்கிறோம் நீங்கள் அழுவது போல அழுங்கள் என்று சொல்வதாகவே இது இருக்கிறது.

கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாநிலங்களிலும் கூட மீண்டும் அது அதிக அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படக் கூடும். பிஜேபி யாத்திரையில் பங்கேற்பவர்கள் எவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை, முகக்கவசமும் அணிவதில்லை. இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதன்மூலம் கரோனா பரவுவதற்குத் தமிழக அரசே உடந்தையாக இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.

அத்துடன், பாஜகவின் யாத்திரைக்கு அதிமுகவினர் தான் ஆட்களைத் திரட்டி வந்து சேர்க்கிறார்கள்; பணம் கொடுத்து ஆண்களும், பெண்களும் அதிமுகவினரால் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யப்படுகிறார்கள். பாஜக நடத்தும் யாத்திரை என்று சொல்லப்பட்டாலும் அதற்கு ஆள் சப்ளை செய்யும் வேலையை அதிமுகவே செய்து வருகிறது என்பதையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

யாத்திரையில் பங்கேற்கும் பாஜகவினர் அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி ஆத்திரமூட்டும் விதமாகப் பேசுவதோடு, சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மாறுவதற்குமுன் தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். சென்னை உயர்நீதிமன்றமும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் உண்மையிலேயே தமிழக அரசு அக்கரையோடு இருந்தால் தடையை மீறி யாத்திரை செல்வோரைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” இவ்வாறு கூறியுள்ளார்.

vel yathirai vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe