'Politically dishonest comment; Vijay among the Sangh Parivar mob' - Thirumavalavan interview Photograph: (thirumavalavan)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர்.
நேற்று விஜய் வெளியிட்டிருந்த வீடியோவில், 'கிட்டத்தட்ட ஐந்து மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் சொல்லும் பொழுது கடவுளே நேரில் வந்து இறங்கி வந்து உண்மைகளை சொல்ற மாதிரி தோணுது. சீக்கிரமே எல்லாம் உண்மைகளும் வெளியே வரும்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக திருமாவளவன் பேசுகையில், ''மற்ற மாவட்டங்களில் நடக்கவில்லை என்று சொன்னால் மற்ற மாவட்டங்கள் ஆந்திராவில் இருக்கிறதா? கேரளாவில் இருக்கிறதா? தமிழ்நாட்டில் தான் அந்த மாவட்டங்களும் இருக்கிறது. அந்த மாவட்டங்களில் இவர் பேரணி நடத்தும் பொழுது, பரப்புரையும் மேற்கொள்ளும் பொழுது அதிமுக ஆட்சியில் இருந்ததா? திமுக ஆட்சியில் இருந்ததா? இந்த ஒப்பீடே தவறானது. மற்ற இடங்களில் பாதுகாப்பு தந்த அதே தமிழ்நாடு காவல்துறை தான் கரூரிலும் இருந்தது. மற்ற மாவட்டங்களில் பரப்புரை செய்கின்ற பொழுது அரசு இவருக்கு ஒத்துழைத்தது என்றால் மறுத்தது யார்? செந்தில் பாலாஜியை மட்டுமே குற்றவாளி என்று சொல்ல விரும்புகிறாரா? அப்படி என்றால் அவர் என்ன வகையான குற்றத்தை செய்தார்? ஆட்களை ஏவினாரா? கல் எறிந்தாரா? வன்முறையை தூண்டினாரா? அதனால் போலீஸ் லத்தி சார்ஜ் நடந்து துப்பாக்கி சூடு நடந்து உயிரிழப்பு ஏற்பட்டதா? இதுதான் அரசியல் நேர்மையற்ற கருத்து.
ஏற்பட்டது கூட்ட நெரிசல் சாவுகள். கூட்ட நெரிசலில் இறந்திருக்கிறார்கள். ஒரு ஸ்கொயர் மீட்டரில் நான்கு பேர் ஐந்து பேர்தான் இருக்க முடியும். ஆனால் பத்து பேர் பதினைந்து பேர் நிற்பதற்கான கூட்டம் அந்த இடத்தில் திரண்டு இருக்கிறது. 10 மணிநேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட ஒரு தற்காப்பு முயற்சி, நாம் பிழைத்தால் போதும் என்று ஒவ்வொருத்தரும் தப்பிக்க முயல்கிறார்கள். அதில் கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்து ஓடியதால் ஏற்பட்ட சாவு என்பது 100 விழுக்காடு கண்கண்ட உன்னை. அதை போய் மறைத்து அதில் சதி இருக்கிறது என்று சொல்வதும், உள்நோக்கம் கற்பிப்பதும் திமுக அரசின் மீது பழி போடுவதும் இது மிக மிக ஆபத்தான ஒரு அரசியல். அவருக்கே நல்லதல்ல. இதை விஜய் சுயமாக சிந்தித்து பேசியதாக நான் பார்க்கவில்லை.
அவர் கூட சுற்றி இருப்பவர்கள் அவரை உசுப்பேற்றி இந்த மாதிரி இன்புட்ஸ் கொடுத்து இப்படி பேசுங்கள் என பேச வைக்கிறார்கள். அவர் என்றைக்கு சுயமாக சிந்தித்து பேசுகிறாரோ அன்று அவருக்கு ஒரு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும். விஜய்யை சுற்றி இருப்பவர்கள் அரசியல் அனுபவம் மற்றவர்கள் என்று சொல்லவில்லை. விஜய் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சங்பரிவார் அமைப்புகளோடு தொடர்பு உள்ளவர்கள். அந்த பாசறையில் வளர்ந்தவர்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகள் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற இன்புட்ஸ் படிதான் விஜய் பேசுவது உள்ளது. ஹேமமாலினி தலைமையில் ஒரு டீம் வந்திருக்கிறார்கள். எதற்காக அவர்கள் உள்ளே நுழைகிறார்கள். உடனடியாக முன்னாள் பாஜக தலைவர் அரசாங்கத்தின் மேல் தான் தப்பு என்கிறார். அப்படி ஏதாவது பொதுமக்கள் சொன்னார்களா? இவர்களாக கருத்து உருவாக்கம் செய்கிறார்கள். இந்த அரசியல் விஜய்க்கு எதிராக போய் முடியும்'' என்றார்.