சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரை நிறைவு விழா மற்றும் சென்னை முகப்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பங்கேற்க உள்ளார். இதற்காக கே.சி. வேணுகோபால் இன்று (17.02.2026) காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். அங்கு, என்.ஆா். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசைக் கண்டித்து நடைபெற்ற யாத்திரை நிறைவு விழாவில் கே.சி. வேணுகோபால் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மீண்டும் சென்னை திரும்புகிறார். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் இன்று மாலை பங்கேற்க உள்ளார். அப்போது தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்துள்ளது குறித்தும் முக்கிய முடிவுகளை அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெறும் பாதயாத்திரையிலும் கலந்துகொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து கே.சி. வேணுகோபால், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோருடன் இன்று மாலை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us