தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி இன்று (07.01.2026) காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக – பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்டபாஜகவின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/07/eps-team-governor-2026-01-07-18-37-49.jpg)
முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எடப்பாடி பழனிசாமி நேற்று (06.01.26) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் திமுக அரசுக்கு எதிராக மனு அளித்திருந்தார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2021ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்த பட்டியலை ஆளுநரை சந்தித்து வழங்கிருக்கிறோம். கடந்த நான்கரை ஆண்டு காலமாக திமுக அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களின் முழுமையான ஆதாரங்கள் உள்ளதால் அதற்கு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வலியுறுத்தியுள்ளோம்.
கடந்த 56 மாதங்களாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து தமிழ்நாட்டை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது. வருடத்திற்கு சுமார் ரூ. 1 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டை மிக கேவலமாக நிர்வாகம் செய்து ஏற்கெனவே இருந்த கடனை விட கூடுதலாக சுமார் ரூ. 4 லட்சம் கோடி அதிகரித்தது தான் திமுக அரசின் சாதனை. ஆட்சிக்கு ஒரு வருடத்திலேயே திமுக அரசு கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாய்யை சபரீசனும், உதயநிதியும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானது. ஊழல் செய்வதை தவிர, தமிழக மக்களுக்கு இவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/eps-delhi-car-2026-01-07-18-36-50.jpg)