Political party leader massacre Riots are increasing day by day in Bangladesh
கடந்த பல மாதங்களாக வங்காளதேசத்தில் வன்முறைகளும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் பல நபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த பதற்றரமான சூழ்நிலையில், தற்போது அரசியல் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) முக்கியத் தலைவராக இருந்து வந்தவர் அஜிசுர் ரஹ்மான் முசபீர். வங்கதேச தேசியவாதக் கட்சியின் தன்னார்வப் பிரிவான டாக்கா நகர வடக்கு ஸ்வேச்சசேபக் தளத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அவாமி லீக் ஆட்சியின் போது அவர் கணிசமான காலம் சிறையில் கழித்துள்ளார். அரசியல் வழக்குகளில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். ஷரியத்பூரைச் சேர்ந்த இவர், மேற்கு கார்வான் பஜாரில் உள்ள கார்டன் சாலையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த சமயத்தில், முசபீர் நேற்று (07-01-26) மாலை ஷரியத்பூரைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் சூப்பர் ஸ்டார் ஹோட்டல் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் முசபீர், தனது நண்பர் மசூதுடன் அருகிலுள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரவு, ஃபார்ம்கேட் அருகில் உள்ள ஸ்டார் கபாப் கடை முன்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் முசபீர் மற்றும் மசூத் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், முசபீர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தா.
இந்தச் சம்பவம் நேற்று (07-01-25) இரவு 8:40 மணியளவில் தலைநகரில் உள்ள பசுந்தரா சந்தைக்குப் பின்னால் உள்ள தேஜ்துரி பஜார் பகுதியில் நடந்தது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள காவல் முகாமின் பொறுப்பு ஆய்வாளர் முகமது ஃபாரூக் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முசபீர் பிஆர்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மசூத், சிகிச்சைக்காக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மசூத்தின் வயிற்றின் இடது பக்கத்தில் சுடப்பட்டுள்ளதால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்’ எனத் தெரிவித்தார்.
முசபீர், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், தேஜ்கான் வார்டு-26-ல் கவுன்சிலர் பதவிக்கு பிஎன்பி ஆதரவு வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, முசபீர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, உள்ளூர் பிஎன்பி உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் சோனார்கான் சந்திப்புக்கு அருகில் போராட்டங்களை நடத்தினர். சமீபத்தில் நாடு முழுவதும் அரசியல் வன்முறை அதிகரித்துள்ளதாக வரும் செய்திகளுக்கு இடையில், வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தலுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகள் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
Follow Us