தந்தை பெரியாரை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடியவர்கள் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால் அதற்கு நேர்மாறாக, இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியாரை மிகவும் காட்டமாக தொடர்ந்து விமர்சிப்பவர்கள் பா.ஜ.கவினர். இதனிடையே தொடக்க காலத்தில் தந்தை பெரியாரை புகழ்ந்து அரசியல் செய்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியாரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் சீமானுக்கும், திருமாவளவனுக்கும் தொடர்ந்து முரண்பாடுகள் உள்ள நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் திமுக, விசிக, பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் ஆகிய 4 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக செல்ஃபி எடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளனர். அதாவது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று காலை திருச்சிக்கு சென்றிருந்தனர்.
திருச்சி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக 4 பேரும் இன்று மாலை திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தனர். அப்போது 4 பேரும் ஒன்றாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து நான்கு பேரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “சற்று முன் திருச்சி விமான நிலையத்தில். ‘முறுவலிக்கும் முரண்கள்’. அண்ணன் திருச்சி சிவா எடுத்த ‘செல்ஃபி’ என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/selfie-2026-02-18-19-56-19.jpg)