இந்தியா முழுவதும் இன்று (20-10-25) தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். மேலும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரையரங்குகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தினத்தையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இதனிடையே இந்த தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாவது, ‘தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும். மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

அதே போல் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் வகையில் ஆட்சி நடத்தும் பா.ஜ.கவுக்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை வருவதாக குறிப்பிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை, தீமையை வதம் செய்த தீபாவளி திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட மாசில்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.