தமிழகச் சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது கடந்த சட்டமன்ற தேர்தலை போன்றே இந்த முறையும் 25 தொகுதிகள் ஒதுக்குவதாக திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியதற்குக் காங்கிரஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியில் சார்பில் 35க்கும் மேற்பட்ட இடங்களையும், இரண்டு ராஜ்யசபா இடங்களையும் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்றொருபுறம் 'ஆட்சியில் பங்கு' வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், திமுக தலைமை இதற்குப் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில் தான் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் (ஏப்ரல் 2ஆம் தேதி) முடிவடைய உள்ளது.
எனவே இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 18ஆம் தேதி (18.02.2026) வெளியிட்டது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 05 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். இருப்பினும் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுதினம் (05.03.2026) நிறைவடைய உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/congress-3m-team-2026-03-03-08-37-30.jpg)
முன்னதாக கூட்டணி உடன்பாட்டின்படி காங்கிரஸிற்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை காங்கிரஸ் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, காங்கிரஸ் கட்சியானது இன்று (03.03.2026) மாலைக்குள் தனது இறுதி முடிவை அறிவிக்காவிட்டால், மூன்று இடங்களுக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்களையே அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மீதம் உள்ள ஒரு இடத்தினை தேமுதிகவிற்கு ஒதுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் திமுக சார்பில் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், புதிதாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில், மூன்றாவது வேட்பாளராக முன்னாள் எம்.பி.யான, எம்.எம். அப்துல்லா களம் இறக்கப்படலாம் எனவும் அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக இன்று வரை காத்திருக்க முடிவெடுத்துள்ள திமுக, இழுபறி நீடித்தால் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us