Political change caused by Messi event and Mamata Banerjee take charge sports department
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக கடந்த 13ஆம் தேதி இந்தியா வந்தார். முதல் நாளிலேயே, கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்ற மோகன் பாகன் மற்றும் டயமண்ட் ஹார்பர்ஸ் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக மெஸ்ஸி மைதானத்துக்கு வந்தார். அப்போது, அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறிது நேரம் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்து, தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்தில் தூக்கி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மெஸ்ஸியை சிறிதி நேரம் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஆத்திரமடைந்து, மைதானத்திற்குள் குதித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை சூறையாடினர். இதையடுத்து மெஸ்ஸியின் ரசிகர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து வெளியேறச் செய்தனர். இதனால், கால்பந்து மைதானம் கலவரம் நடந்த இடம் போல் மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெஸ்ஸி இந்தியா வந்த முதல் நாளிலேயே இச்சம்பவம் நடைபெற்றது சர்ச்சையானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார். அதன்படி, இந்த சம்பவம் குறித்து இந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்தவிவகாரம் தொடர்பாக முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பினார். அந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார். அரூப் பிஸ்வாஸ் கவனித்து வந்த விளையாட்டுத் துறையை மம்தா பானர்ஜி கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us