Advertisment

‘டங்கா டுங்கா’ கூத்து....; நள்ளிரவில் இளம்பெண்களுடன் குத்தாட்டம் போட்ட போலீஸ்!

103

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவில்பட்டி புது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் டிப்டாப்புடன் கெத்து காட்டியபடி மப்டியில் நிற்கும் காவலரைச் சுற்றி இளம் பெண்களும் இளைஞர்களும் இடுப்பை வளைத்து நெளித்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில், “பாடுங்கடா வாய தொறந்து...” என்று ஒரு இளம் பெண் குரல் கொடுக்க, “போடு போடு” எனத் துள்ளல் மிக்க ஒரு டங்கா டுங்கா நடனம் நடந்தேறியிருக்கிறது. இந்த விடியோ வைரலாகி தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Advertisment

இந்த வீடியோ தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு கனி சேகரும், கான்ஸ்டபிள் திருப்பதியும் தான் அந்த வீடியோவில் இருக்கும் போலீஸ்காரங்க. அவங்க ரெண்டு பேரும் ஸ்பெஷல் டீமில் இருந்தாங்க. ஒரு பத்து, பதினைந்து நாளைக்கு முன்னாடி நைட் ரவுண்ட்ஸ்சில் இருந்த போது, புது பஸ் ஸ்டாண்டுக்கு ஸ்பெஷல் டீம் ஆட்கள் போயிருக்காங்க. அங்க நாலு இளம் பெண்களை சுற்றி வயசு பசங்க நின்னு பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. இவங்க போய் அவங்கள விசாரிச்சு இருக்காங்க. கோவில்பட்டி பக்கத்துல ஒரு கிராமத்தில் கோயில்  கொடை விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் ஊருக்கு திரும்பி செல்வதாகவும், வெளியூர் பெண்கள் இருவரை பஸ்ஸில் வழியனுப்பி வைத்து விட்டு, டீ குடிப்பதற்காக புது பஸ் ஸ்டாண்டில் நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் ஒரு பத்து நிமிஷம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் ஸ்பெஷல் டீமில் இருந்த ஆட்கள் இன்னைக்கு ஏட்டு கனி அண்ணனுக்கு கல்யாண நாளு. ஒரு நல்ல பாட்டு படிச்சு வாழ்த்துங்கன்னு சொல்லி இருக்காங்க. ஆனால், அவங்க தயங்கி நின்ற போது எங்களுக்கு பல சோலி இருக்கு. சீக்கிரம் ஆரம்பிங்கன்னு சொல்லியிருக்காங்க, உடனே பஸ் ஸ்டாண்ட் வாசலில் ஏட்டு கனி சேகரை ரவுண்டு கட்டி, பருத்தி வீரன் படத்தில் வரும் டங்கா டுங்கா தவிட்டுக்காரி பாடல் போல அந்த ஆடல்பாடல் குரூப் ஆடிப்பாடி ஏட்டு கனிசேகரையும், அங்கிருந்த ஸ்பெஷல் டீம் ஆட்களையும் பக்குவமா உற்சாகமாக்கி இருக்காங்க. ஏட்டு கனிசேகரும் நடுவுல கெத்து காட்டி சந்தோஷமா நின்னு ரசித்திருக்கிறார். ஆனால்..... அவங்களுக்கு ஒரு டீ கூட வாங்கி கொடுக்கல. ஓசியில தான் இந்த கூத்து எல்லாம் நடந்திருக்கு.

இதை அப்போது வீடியோ எடுத்தது எங்க போலீஸ் டீம் தான். ஆனால், சுமார் 15 நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ வெளியாகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரடி உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், காவலர்களுக்கும் பணப் பரிமாற்றத்திலும், பணி ஒதுக்கீட்டிலும் பிரச்சினை இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் பதவி நீக்கம் செய்ய முயல்வதற்காக, இப்போது இந்த வீடியோவை எங்கள் காவல் தரப்பே சமூக ஊடகங்களில் கசியவிட்டுள்ளது” என்கின்றனர்.

சாமானிய பொதுமக்கள் யாராவது இப்படி நள்ளிரவில் பஸ் ஸ்டாண்ட் வாசலில் குத்தாட்டம் போட்டால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதை அனுமதிக்குமா? என்று கேள்வி கேட்டு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இடம், பொருள், ஏவல் தெரியாமல், காவலர்கள் அரங்கேற்றிய ‘டங்கா டுங்கா...’ கூத்தும், காவல் நிலைய அரசியலும் மெல்ல மெல்ல முற்றி, இன்று முச்சந்திக்கு வந்து சந்தி சிரிக்க வைத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

Kovilpatti social media police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe