உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அனுராக் சிங், அங்குள்ள காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சௌமியா காஷ்யப் என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, லிவ்-இன் உறவில் இருந்த கான்ஸ்டபிள் அனுராக் சிங், கடைசியில் சௌமியாவைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சௌமியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு எழுந்த அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி, கடந்த ஜனவரி மாதம் இருவரும் மைன்புரியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த சில மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால், பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சௌமியா தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சௌமியாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சௌமியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எனது கணவரின் குடும்பத்தினர் மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். என்னால் தாங்க முடியவில்லை. எனது கணவருக்கு நான் உயிருடன் இருக்கும்போதே, இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், எனது கணவரின் மாமா ஒரு வழக்கறிஞராக இருக்கிறார். அவர், என் கணவரிடம், ‘உன் மனைவியைக் கொன்று விடு. உனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார்” என்று சௌமியா கண்ணீருடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்போது காவல்துறையினருக்கு கிடைத்த இந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.