கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் கரியாலூர் காவல் நிலையம் உள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் மூரார்பாளையத்தைச் சேர்ந்த 32 வயதான யுவராஜ் என்பவர் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார். மேலும், கரியாலூர் காவலர் குடியிருப்பில் தங்கி, தனது பணியை மேற்கொண்டு வந்த இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவலர் யுவராஜ் தனது காவலர் குடியிருப்பில் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் அதீத போதையில் இருந்த யுவராஜ், காவல் குடியிருப்பில் அரைநிர்வாணமாக நின்றுகொண்டு, பெண்களிடம் ஆபாசச் செயல் செய்து அத்துமீறி நடந்துள்ளார். அத்துடன், அந்த வழியாகச் சென்ற பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசியதுடன், அறுவறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்களுக்கு, காவலர் யுவராஜின் செயல் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை அவ்வழியாகச் சென்ற சிலர் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், சமூக வலைதளங்களில் அது வேகமாகப் பரவியது. அந்த வீடியோவில், ஒரு திருமணமாகாத ஆண், ஒரு திருமணமான பெண் விருப்பமானால் தனிமையில் இருந்துகொள்ளலாம் என்று அறுவறுக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ விவகாரம் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன், காவலர் யுவராஜை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அதன்பிறகு, காவலர் யுவராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், எஸ்.பி. மாதவன் யுவராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே, இதே கரியாலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தனிப்பிரிவு காவலர் பிரபு, 17 வயது சிறுமியிடம், “நீ என்னுடன் தனிமையில் இருந்தால், உன் தந்தையின் மீதான வழக்கை ரத்து செய்கிறேன்” என்று கூறி அத்துமீறலில் ஈடுபட்டிருந்தார். இந்தச் சம்பவம் பேசுபொருளாக மாறியதையடுத்து, காவலர் பிரபு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அந்தச் சம்பவத்தின் பரபரப்பு கூடக் குறையாத இந்த நேரத்தில், அதே கரியாலூர் காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவலரும் சர்ச்சையில் சிக்கியிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.