புகார் கொடுக்க வந்த இளம்பெண்; கர்ப்பமாக்கிய காவலர் - போக்சோ வழக்கு பாய்ந்ததன் பகீர் பின்னணி!

103

15 வயது சிறுமி... புகார் கொடுக்க வரும் இளம்பெண்கள்... சக பெண் காவலர்கள்... என பலரை ஏமாற்றிய காவலர் மிகாவேலின் பின்னணி வெளியாகி காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான மிகாவேல். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், திருச்செந்தூர், ஆறுமுகநேரி மற்றும் சென்னை சிட்டி ஆகிய இடங்களில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது உறவுக்கார சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, இவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததால், ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டார். இருப்பினும், மிகாவேல் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அண்மையில் அவர் பணியிடைநீக்கம்  செய்யப்பட்டார். அதன்காரணமாக  சில நாட்களுக்கு முன்பு மிகாவேல் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு அளித்த அதே சிறுமிக்கு, மீண்டும் தொந்தரவு  கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில்  விசாரணை நடத்தி, 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மிகாவேலை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தபோது, “மிகாவேல் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, குடும்பப் பிரச்சினை காரணமாக காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு உதவுவது போல் நடித்து, அவரை ஏமாற்றி, காதல் வலையில் சிக்கவைத்தார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அந்தப் பெண்ணுடன் உறவு வைத்து, அவரை கர்ப்பமாக்கினார். இதற்கிடையில், மிகாவேலின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த பாதிக்கப்பட்ட பெண், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததுடன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண், அவரது குழந்தை மற்றும் மிகாவேல் ஆகியோருக்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மிகாவேல் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, நீதிமன்றம் மிகாவேலை டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதன் விளைவாக, அவர் அண்மையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சென்னையில் பணியாற்றிய கடந்த சில ஆண்டுகளில், அங்கும் ஒரு பெண்ணை ஏமாற்றி, அவருடன் உறவு வைத்து, கர்ப்பமாக்கியுள்ளார். மகளிர் காவல் நிலைய விசாரணையில், அந்தப் பெண் தற்போது ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும், 2020-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு அளித்த உறவுக்கார சிறுமியிடம் மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்தார். இதை அந்த சிறுமியின் பெற்றோர் கண்டித்தபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு முதல் பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் அடிப்படையில், மிகாவேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மிகாவேல் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருவதால், இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில், டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். இந்த முடிவுகள் வந்தவுடன், மிகாவேல் மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என கூறுகின்றன.

தோண்டத் தோண்ட பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும் அத்துமீறல்களும் வெளிவரும் நிலையில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் மிகாவேலை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

girl child police Thoothukudi young girl
இதையும் படியுங்கள்
Subscribe