கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராகப் பணியாற்றி வருபவர் சம்பத். இவர் முன்னதாக திருநெல்வேலியில் காவலராகப் பணியாற்றியபோது, அப்பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்குள்ளம் நெருக்கமாகி, அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சம்பத் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பத், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த இளம்பெண்ணுடன் அவ்வப்போது தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கடலூரில் உள்ள தனியார் விடுதியில் மூன்று நாட்கள் இருவரும் தங்கியிருந்ததாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில், இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சம்பத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, இளம்பெண்ணை அவமானப்படுத்தி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காவலர் சம்பத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி காவலர் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.