கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிலர் கடந்த சில நாட்களாக இரிடியம் தங்களிடம் உள்ளதாகவும், 400 கோடி ரூபாய்க்கு அதனை விற்பனை செய்ய விலை பேசி வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரிடியம் விற்பதாகக் கூறி வருபவர்களை கடந்த இரு தினங்களாக காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

104

இந்த நிலையில், காவல்துறையினர் மாறுவேடத்தில் அவர்களிடம் இரிடியம் வாங்க வந்தவர்களைப் போலப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரிடியத்தைப் பார்க்க வேண்டுமெனில் முன்பணம் தர வேண்டும் என்று குற்றவாளிகள் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு பதிலளித்த காவல்துறையினர், வெளிநாட்டில் விற்பனை செய்ய 25 லட்சம் ரூபாய் முன்பணம் தருவதாகப் பேரம் பேசினர். இதனை நம்பிய குற்றவாளிகள், இரிடியத்தைக் காண்பிக்க ரகசிய இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு சென்ற குற்றத் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள், மற்ற காவலர்களுடன் இணைந்து நான்கு பேரை மடக்கிக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நெய்வேலியைச் சேர்ந்த ஆனந்த், சந்திரசேகரன், முருகன், மற்றும் விக்னேஷ் ஆகியோராவர். இவர்களிடம் இருந்து இரிடியம் எவ்வாறு கிடைத்தது, அது உண்மையான இரிடியமா அல்லது போலியானதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.