தங்கம் விலை உயர உயர நகை திருட்டுச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தற்போது குழந்தைகள் அணிந்திருக்கும் சின்ன சின்ன தங்க நகைகளைத் திருட பெண் திருடர்கள் களமிறங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நேற்று (05.01.2026 - திங்கள் கிழமை) மதியம் தொண்டி செல்லும் ஒரு தனியார் பேருந்து வந்து நின்றது.  அச்சமயத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அந்த பேருந்தில் ஏற ஓடிச் சென்றனர். அதே சமயம் பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கியதால் அந்த இடத்தில் சிறிய அளவில் கூட்டம் காணப்பட்டது. 

Advertisment

அந்த  பேருந்தில் முத்துக்குடா செல்ல ராஜியம்மான் தனது இரண்டரை வயது பேத்தி அபியாவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நின்ற போது பின்னால் வந்து நின்ற ஒரு பெண் சிறுமி அபியா கழுத்தில் கிடந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு பேருந்தில் ஏறாமல் நகர்ந்து சென்றுவிடுகிறார். அந்த பெண் கூடவே இன்னொரு பெண்ணும் சென்றுவிடுகிறார். நீண்ட நேரத்திற்கு பிறகே பேத்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் காணாமல் பதறிய ராஜியம்மாள் அறந்தாங்கி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குழந்தை கழுத்தில் சங்கிலி அறுக்கும் காட்சி தனியார் பேருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதை வைத்து கிரைம் பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

அதே போல, ஜனவரி 1ஆம் தேதி ஆவுடையார்கோயில் அருகே விளானூர் கிராமத்தில் ஒரு குழந்தையின் நகையைப் பறிக்க முயன்ற பெண்ணை பொதுமக்களே பிடித்து ஆவுடையார்கோயில் போலிசாரிடம் ஒப்படைத்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று நீண்ட நேரம் நடத்திய விசாரணையில் எந்த தகவலையும் சொல்லாத பெண் கிரைம் பிரிவு போலீசார் வந்து விசாரித்த பிறகுத் தன் முகவரியைக் கூறியுள்ளார். அதாவது, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், திருவாசல் மேலத்தெரு காளிதாஸ் மனைவி ஈஸ்வரி (வயது 23) என்பது தெரிய வந்தது. புகார்கள் ஏதும் இல்லாததால் குழந்தையிடம் நகை பறிக்க முயன்ற பெண்ணை விசாரணைக்குப் பிறகு உறவினர்களை வர வைத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

pdu-child-the-1

இப்படி குழந்தைகள் அணிந்துள்ள நகைகளைக் குறிவைத்துத் திருட ஏராளமான பெண்கள் களமிறங்கி உள்ளதாகக் கூறுகின்றனர். ஆகவே பேருந்துகளில் கூட்டத்திலும், குழந்தையை வைத்திருக்கிறோம் என்று வாங்கி நகைகளைக் கழற்றிக் கொண்டு தப்பிச் செல்லும் பெண்களும் அதிகமாக உள்ளனர். ஆகவே முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் போலீசார்.

Advertisment