ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் சொகுசு கார்கள், கனரக வாகனங்களில் பண்டல் பாண்டல்களாகக் கட்டி டன் கணக்கில் கொண்டு வரப்படும் கஞ்சா கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து நள்ளிரவு நேரங்களில் மீனவர் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடற்கரைகளில் இருந்தே அதிகமான கத்தல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்கும் முயற்சியில் போலிசார் தீவிரம் காட்டி வந்தாலும் கஞ்சா கடத்தல்கள் குறையவில்லை. 

Advertisment

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட போலிசாருக்கு ஒரு கஞ்சா கடத்தல் கும்பல் பற்றிய ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்களிடம் டன் கணக்கில் கஞ்சா பதுக்கி வைத்து இலங்கைக்குக் கடத்துவதும் ரகசியமாகத் தெரிந்து கொண்ட போலிசார் அவர்கள் வழியிலேயே சென்று இதனைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவிடச் சிறப்புத் தனிப்படை போலிசார் ரகசியமாகக் களமிறங்கினர். சில நாட்களாகத் தகவல்களைச் சேகரித்த தனிப்படை போலிசார் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கு 100 கி கஞ்சா வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதிக்குக் கொண்டு வர வேண்டும். அதே இடத்தில் பணத்தை வாங்கிட்டு போகலாம் என்று பேசியதில் கஞ்சா கும்பலும் ஓ.கே சொன்னது. எப்ப வேண்டும் எங்கே வேண்டும் என்று கேட்க அதற்கான நாளும் இடமும் தனிப்படை போலிசாரால் குறிக்கப்படாது. 

கிழக்கு கடற்கரைச் சாலையில் மீமிசல் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லிவிட்டு ஆங்காங்கே ரகசியமாக மறைந்திருக்கக் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு காஸ்ட்லியான யமகா பைக் (TN 65 BB 9576) பைலட்டாக வந்து நிற்க அதன் பின்னால் ஒரு ஓம்னி கார் (TN 55 AA 0693) வந்து நின்றது. அந்த நேரத்தில் பொறி வைத்துக் காத்திருந்த தனிப்படை போலிசாரும் உள்ளூர் போலிசாரும் அந்த இரு வாகனங்களையும் மடக்கினர். அதன் பிறகே அவர்களுக்கு தாங்கள் சிக்கியது தெரிந்தது. வாகனத்தைச் சோதனை செய்த போது 2 கி கஞ்சா பண்டல்கள் 50 இருந்தது. அதனைக் கைப்பற்றிய போலிசார் பைலட்டாக வந்த பைக் மற்றும் கஞ்சா பண்டல்கள் ஏற்றி வந்த கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அதில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பழங்குளம் ஊரணிக்கோட்டை செல்வராஜ் மகன் ஆண்ட்ரூஸ் (வயது 27), மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் பிரிட்டோ பிரபாகரன் (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா மற்றும் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்து தனிப்படை போலிசாரை பாராட்டினர். 

மேலும், மீமிசல் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கான முதலாளி யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்தப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மிதந்த 40 கி கஞ்சா பறிமுதல், நேற்று (23.09.2025) 100 கி பறிமுதல் ஒரே வாரத்தில் இரு கஞ்சா கடத்தல்களைப் பிடித்து இலங்கைக்குக் கடத்த இருந்த 140 கி கஞ்சா பண்டல்களையும் போலிசார் கைப்பற்றி உள்ளனர்.

Advertisment