நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக கூத்தன்குழி பகுதியில் கடலம்மா மாநாட்டை நேற்று (21.11.2025) நடத்தினார். இந்த மாநாட்டில் சீமான், கடல் மனிதருக்குச் செய்யும் நன்மைகள் குறித்தும், நாம் கடலை சீரழிப்பது குறித்தும் பேசியிருந்தார். இந்த மாநாட்டை நடத்தி முடித்த நிலையில் ரகமத் நகர் பகுதியில் உள்ள மண்டபத்தின் அறையில் சீமான் தங்கியுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் இன்று (22.11.2025) பணங்குடி பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் பல்வேறு கட்டிடங்கள் அங்கு கட்டப்பட்டுள்ளது. எனவே மேய்ச்சல் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேய்ச்சல் நிலங்களை மீட்கும் போராட்டமாக மாடு மேய்க்கும் போராட்டத்தைச் சீமான் மற்றும் அவருடைய கட்சியினர் மற்றும் மாடு மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து திருமண மண்டபத்தின் அறையின் முன்பாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி போலீசார் காலையில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சீமான் பணங்குடி செல்ல முயற்சித்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us