தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள பட்டீஸ்வரம் என்ற இடத்தில் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி பள்ளி முடித்து  மாணவர்கள் வழக்கம் போல் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பட்டீஸ்வரம் தேரோடும் கீழவீதியில் இரு வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கலையரசனை, 11ஆம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்கள் ஒன்று சேர்ந்து கட்டை, கல் உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

Advertisment

இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் கலையரசனைச் சிகிச்சைக்காகத் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (06-12-25) பிற்பகல் மாணவன் கலையரசன் மூளைச் சாவு அடைந்து மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவர் கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவனின் உடலை வாங்காமல் மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக 11ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை காவல்துறையினர் கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேரை கைது செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இன்று பிற்பகல் மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று மாணவரின் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுள்ளனர். அதன்படி, இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக பதிவு செய்து செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, மேலும் சில பேரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.