Police take action on Coimbatore misbehaviour incident
கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியே வந்த 3 இளைஞர்கள், ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி, அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார், தலைமறைவான அந்த மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த போலீசார், அந்த பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியில் இருந்த செல்போன் எண்கள் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து, அவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட போது அவர்கள் கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 2 தனிப்படை போலீசார், அந்த பகுதியை நேற்று இரவு சுற்றி வளைத்து காட்டுப் பகுதியில் இருந்த அந்த 3 பேரையும் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றனர். இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து போலீசார் தற்காப்பிற்காக, தப்பித்துச் சென்ற 3 பேரை கால் பகுதியில் சுட்டு பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா, சதீஷ் மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவை இருவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர் என்பதும், இந்த மூன்று பேர் மீது காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் மதுபான கடையில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் இந்த மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதை தவிர்த்து அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரையும், சிகிச்சைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us