விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திருவில்லிப்புத்தூர் செல்லும் சாலையில், ஐயப்பன் கோவில் அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி, அவர் கடையைப் பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், 4ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கல்லாவில் வைத்திருந்த 3,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞர் கடைக்குள் நுழைந்து, உரிமையாளரின் ரோலிங் சேரில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு, கல்லாவில் இருந்த 3,000 ரூபாய் ரொக்கம், செல்போன் மட்டுமல்லாமல், உண்டியலில் இருந்த சில்லறைக் காசுகளையும் திருடிச் சென்றது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான குருசாமி (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட பணமும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக, குருசாமி மீது ஏற்கனவே சிவகாசி சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/sivakasi-cctv-the-2026-01-09-18-53-40.jpg)