ஈரோடு ரயில் நிலையத்தில் பகீர்; தொடரும் சம்பவங்களால் போலீசார் அதிர்ச்சி!
வட மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தமிழகத்துக்குள் கஞ்சா கடத்தல் என்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசார் மற்றும் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்த அதிகரித்து வருகிறது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், அசாம் மாநிலம் திப்ருகார் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் நேற்று சோதனையிட்டனர்.
அப்போது பொது பெட்டியில் கழிப்பறை அருகில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்ததும், அசாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். போலீஸ் வருவதை தெரிந்து கொண்ட கடத்தல்காரர்கள் கஞ்ச பையை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் வரும் ரெயில்களில் கஞ்சா பிடிப்படும் சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.