கேரளா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிக அளவிலான வெடிபொருட்கள் சட்டவிரோதமாக மாநிலத்திற்குள் கொண்டுவரப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாலக்காட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகே நேற்று (05-02-26) இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு வாகனம் மட்டும் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது, தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் செந்திலையும் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த வாகனத்தைச் சோதனை செய்தனர். சோதனையில் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த அந்த வாகனத்தில், பழங்களுக்கு அடியில் ஜெலட்டின் குச்சிகளும், டென்டனேட்டர்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், காவல்துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியதையடுத்து 100 பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளும், 20 பெட்டிகளில் டென்டனேட்டர்களும் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர், அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருச்சூரில் உள்ள கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காகக் கோவையிலிருந்து இந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இந்த வெடிபொருட்கள் குறித்து, வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வகை வெடிபொருட்களை விற்பனை செய்ய சில நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது. இருப்பினும், இந்த பொருட்களின் தேவை அதிகமாக உள்ள காரணத்தினால், இவைகள் இங்கு அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது. எனவே, உரிமம் பெறாத சிலர் இந்த வெடிபொருட்களைக் குறைந்த விலைக்கு, ரகசியமாக விற்க முயன்றிருக்கலாம் என்று காவல்துறை தரப்பிலிருந்து முதல் கட்ட தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும், உண்மையான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/vedi-2026-02-05-20-24-33.jpg)