police says Rats ate 200 kilos of illegal material in jharkhand court
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை எலி தின்றதாக போலீஸ் கூறியதால் கைதான நபரை நீதிமன்றம் விடுவித்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சில் இருந்து ராம்கர் நோக்கி ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் எடுத்து செல்லப்படுவதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஓர்மன்ஜி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வெள்ளை நிற பொலேரா காரை வழிமறித்தனர். அப்போது வாகனத்தில் இருந்த 3 பேரும் தப்பிச் செல்ல முயன்றனர். அதன் பிறகு போலீசார் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் பிடித்தனர். இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள பிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் ராய் (26) என்பது தெரியவந்தது. மேலும், அந்த காரை சோதனையிட்ட போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்திரஜித் ராயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணை முடிந்த பிறகு போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் சாட்சியங்கள், கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்ட நேரம், இடம் தொடர்பாக முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காண்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜரான போலீஸ், 200 கிலோ கஞ்சா ஓர்மஞ்சி காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதை முழுவதும் எலிகள் தின்றுவிட்டதாகவும் கூறினர். மேலும், இது தொடர்பாக 2024ஆம் ஆண்டின் காவல் நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட இந்திரஜித் ராயை வழக்கில் இருந்து விடுவிடுத்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க காவல்துறை தவறிவிட்டது. காவல்துறை மிகவும் அலட்சியமாக இருந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்கும் இடையே எந்தவொரு நம்பகமான தொடர்பையும் நிறுவ அரசு தரப்பு தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவிரு ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை’ என்று கூறி குற்றம் சாட்டபட்ட நபரை வழக்கில் இருந்து விடுவித்தனர். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் மாதம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை எலிகள் உட்கொண்டதாக போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us