தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று (16.08.2025) காலை முதல் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் முகாம் அலுவலகமான ரோஜா இல்லத்தில் 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

அதே போன்று சட்டமன்ற உறுப்பினருக்கான விடுதியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியில் அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லம் அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த இல்லத்திற்கு அருகில் உள்ள ஆரம் காலனி பகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர் என்ற பகுதியில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வருகிறார். அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே போன்று அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது திமுகவினர் மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசீலா ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லதாதால் அங்கிருந்தவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை உள்ளே விட மறுத்துள்ளனர். அதன் பின்னர் அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு  அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர். மற்றொருபுறம் அமலாக்கத்துறையின் சோதனையைக் கண்டித்து திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் அங்குள்ள பாதுகாப்புப் படையினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திமுக தொண்டர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என அமைச்சர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சோதனையின் ஒரு பகுதியாக தான் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் உள்ள ஐ.பி. செந்தில் குமாரின் அறையைச் சோதனை செய்வதற்காக இன்று காலை 07:30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது அவரது அறை பூட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 4 மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தினர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.