கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி தவெக கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘கூட்ட நெரிசல் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, கரூர் நோக்கி வந்த விஜய்யின் வாகனத்தை ஒட்டி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. பேருந்து விபத்து தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, வழக்குப்பதிய என்ன தடை?. காவல் துறை தனது கைகளைக் கழுவி விட்டதா?. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குக் கருணை காட்டுகிறீர்களோ?. பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்?. வழக்குப்பதிவு செய்து, பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் விவரம் இன்று காலை வெளியானது. அதன் அடிப்படையில், ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்து பனையூர் அலுவலகத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment