பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மண்டலம், மாவட்டம் மற்றும் கோட்டப் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு, ஒவ்வொரு தொகுதிக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளும் கட்சி ஊழியர்களுக்கு டிசம்பர் 12 முதல் 15-ஆம் தேதி வரை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடத்தப்படவிருக்கும் பயிற்சிப் பயிலரங்கம், தேர்தல் களப் பணி ஆலோசனைக் கூட்டங்கள், திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது உள்ளிட்ட செலவுகளுக்காக லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

Advertisment

பாஜக திருநெல்வேலி கோட்டப் பொறுப்பாளர் நீலம் சுரேஷ் யாதவ், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய 11 தொகுதிகளின் செலவுக்கு என ரூ.10.50 லட்சத்தை கட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, டிசம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் திருநெல்வேலி நோக்கிப் பயணித்தார். காலை 9 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தே பாரத் ரயில் அடைந்த போது, சீருடையில் மற்றும் சிவில் உடையில் வந்த 15- க்கும் மேற்பட்ட போலீசார் ரயிலுக்குள் ஏறி, “இந்த ரயிலில் கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அனைவரது உடைமைகளையும் சோதனை செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Advertisment

பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தனர். சோதனையின்போது பாஜக பிரமுகர் நீலம் சுரேஷ் யாதவின் பையில் ரூ.10.50 லட்சம் ரொக்கமும், அதற்கான ரசீதும் இருப்பது கண்டறியப்பட்டது. எந்தவித விளக்கமும் கூறாமல் அவரை கோவில்பட்டியில் இறக்கி விட்டனர். இதற்கிடையே, நீலம் சுரேஷ் யாதவை அழைத்துச் செல்ல திருநெல்வேலி கோட்ட அமைப்பாளர் சுரேஷும் அவரது காரும் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். ரயில் நிலைய வாசலில் போலீஸ் காவலில் சுரேஷ் அழைத்து வரப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொண்டர்கள்  மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் கோவில்பட்டியில் இருந்து நீலம் சுரேஷ் யாதவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அழைத்துச் சென்றனர். இதைப் பாஜகவினர் காரில் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். இதனால் மீண்டும் கோவில்பட்டிக்கே திரும்பிய போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் நீலம் சுரேஷ் யாதவையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். செய்தி பரவியதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் திரண்டு கோஷமிட்டனர். பிற்பகல் 4 மணியளவில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மாலை 5 மணியளவில் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பணத்தைத் திரும்ப ஒப்படைத்து நீலம் சுரேஷ் யாதவை போலீசார் விடுவித்தனர்.

Advertisment

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நீலம் சுரேஷ் யாதவ், “என்ன காரணமென்றே தெரியாமல் பிடித்து வந்துவிட்டார்கள். எதற்காகப் பிடித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பிடித்த போலீசார் மீது புகார் அளிக்க மாநிலத் தலைவரின் வழிகாட்டுதலின்படி லீகல் டீமிடம் தெரிவித்துள்ளோம். தென் மாவட்டங்களில் என்.டி.ஏ. கூட்டணி மிக வலுவாக உள்ளது. அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருப்பதால், இப்போதே திமுக அரசு எங்களை ஒடுக்க முயல்கிறது” என்றார்.

மண்டலம் வாரியாகவும் கோட்டம் வாரியாகவும் எஸ்.ஐ.ஆர். ஒர்க் ஷாப், பயிற்சிப் பயிலரங்கம், கட்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த தமிழக பாஜக தலைமை சார்பில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் பணம் வழங்கி அனுப்பி வைத்த நிலையில், பிற பகுதிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இன்றி சென்று சேர்ந்த பணம், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி மண்டலத்துக்கு மட்டும் துல்லியமாகக் காட்டிக்கொடுக்கப்பட்டு போலீசில் சிக்கியிருப்பது பாஜக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், “யார் காட்டிக்கொடுத்தார்கள்?” என்ற சந்தேகத்தையும்  பாஜகவினரிடையே எழுந்துள்ளது.

  • மூர்த்தி