மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் காவலர் மகாலிங்கம். 2023 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சேர்ந்த மகாலிங்கம், சிறப்பு காவல்படை காவலராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் வழக்கம் போல் 26 ஆம் தேதி இரவு மகாலிங்கம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

இந்த சூழலில், 27ஆம் தேதி அதிகாலை அந்த பகுதியில் கையில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் யாரும் எதிர்பாராத நேரத்தில் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த சக காவலர்கள் மகாலிங்கத்தை மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காவலர் மகாலிங்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

Advertisment

இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசார், காவலர் மகாலிங்கம் பணிசுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது காதல் விவகாரம் குறித்துத் தற்கொலை செய்துகொண்டாரா? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அந்தக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று மகாலிங்கம் தெரிவித்திருக்கிறார். தற்போது அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

Advertisment

நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.