கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வின் போது முதல்வர் சித்தராமையாவால் பொது இடத்தில் அவமானப்பட்டதாகக் கூறி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் மாநில அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் சித்தராமையா கலந்து பேசத் தொங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த பா.ஜ.க மகளிர் அணியினர் கருப்புக்க் கொடி காட்டி முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் கோபமான முதல்வர் சித்தராமையா, பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாராயன் பரமணியை மேடையில் அழைத்தார். அப்போது முதல்வர், ‘நீங்க யாரா இருந்தாலும் இங்க வா? என்ன பண்ணிட்டு இருந்தீங்க’ என்று கேட்டுவிட்டு அந்த அதிகாரியை அறையை கையை உயர்த்தினார். ஆனால், சிறிது நேரத்திலே அப்படியே நிறுத்திவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மாநில எதிர்க்கட்சிகள், முதல்வர் சித்தராமையாவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், உடல் ரீதியாக தாக்கப்படுவதைத் தவிர்த்தாலும், அவமானத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை என்று கூறி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாராயன் பரமணி தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். இது தொடர்பாக அந்த கடிதத்தில், ‘முதல்வர் சித்தராமையா மேடையில் இருந்து என்னை நோக்கி, ‘ஏய் இங்கே யார் இந்த எஸ்.பி? வெளியே போ! என்று கத்தினார். பின்னர், என்னை அறைவது போல் கையை உயர்த்தினார். உள்ளுணர்வை அறிந்து அறையப்படுவதில் இருந்து தப்பித்துவிட்டேன். முதல்வர் அலுவலகம் மற்றும் காவல் துறையின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காக மேடையை விட்டு அமைதியாக வெளியேறினேன். அந்த இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் , அதிகாரிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்தனர். தொலைக்காட்சியில் இரண்டு நாட்கள் ஒளிபரப்பப்பட்டது. நான் அறையப்படவில்லை என்றாலும் அவமானத்தப்பட்டேன்.

நான் உடல் ரீதியாக தாக்கப்படுவதைத் தவிர்த்தாலும், பொது அவமானத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. யாரோ ஒருவர் இறந்துவிட்டது போல் வீட்டில் ஒரு அமைதி நிலவியது. என் மனைவியும், குழந்தைகளும் தாங்கமுடியாத துக்கத்தில் மூழ்கினர். அந்த சம்பவத்திற்குப் பிறகு எந்த அதிகாரியும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நான் தனித்துவிட்டது போல் உணர்வு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், துறையில் நடந்த கூட்டங்களில் எனக்கு அசெளகரியத்தை கொடுத்தது. எனது திறமையை குறைத்து மதிப்பிட்டது போல் உணர்வை கொடுத்தது. கடந்த 31 ஆண்டுகளாக நான் கர்நாடகா மாநில காவல்துறையில் நேர்மையுடன் பணியாற்றி வருகிறேன். சீருடையில் இருக்கும் போது எனது தாயுடன் இருப்பது போலவே இருக்கும் உணர்வை கொடுத்தது. ஆனால் அடிப்படை கண்ணியம் மறுக்கப்பட்டது, நான் எப்படி நீதியை எப்படி நிலைநாட்ட முடியும்? எனக்கு நீதி கிடைக்காமல், மற்றவர்களுக்க நீதி வழங்க முடியும் என்று எதிர்பார்த்தால் அது எப்படி நியாயமாக இருக்கும்? இந்த நிகழ்வு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது எனக்கு மட்டுமல்ல, இன்று பாதுகாப்பற்றதாக உணரும் ஒவ்வொரு சீருடை அணிந்த அதிகாரிக்கும், அரசு ஊழியருக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்’ என்று குறிப்பிட்டு தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Advertisment

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரமணி சமர்ப்பித்த ராஜினாமா கடிதம் குறித்து கர்நாடக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அவரது கடிதம் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையாவும் மூத்த அமைச்சர்களும் அவரை தொடர்பு கொண்டு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் பரமணியை சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சித்தராமையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.