சென்னை பாடியில் மளிகைக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகளிடம் மாமூல் தர மறுத்த கர்ப்பிணிப் பெண்ணை கத்தியால் ரவுடிகள் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, பாடி ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள கலைவாணர் நகர் முனீஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழ்மதி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 15 ஆம் தேதி இரவு கடையை மூடுவதற்கு தயாராக இருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6 நபர்கள் மாதம் 5000 ரூபாய் மாமூல் தர வேண்டும் என மிரட்டல் விட்டுள்ளனர்.
தன்னால் மாமூல் தர முடியாது என வேல்முருகன் தெரிவித்த நிலையில், ஆறு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அருகில் இந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றுள்ளனர். அப்பொழுது வேல்முருகனின் மனைவி தமிழ்மதி தடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த கும்பல் கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். இதில் பெண்ணின் முதுகு, தலை, காது பகுதியில் கத்தியால் கீறி அறுத்துள்ளனர். இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மாமூல் கேட்டு மிரட்டல் விட்டது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர். விசாரணையின் அடிப்படையில் 3 பேரை கைது செய்துள்ள நிலையில் இதில் தொடர்புடைய கடலூரைச் சேர்ந்த பிரபல ரவுடியான சுனாமி சூர்யா உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.